ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை,
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி
மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரம் வரும் அமாவாசை நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது.
மதுரை தெற்குமாசி வீதி பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 12 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு 3,500 வடைமலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சந்தன அலங்காரம் நடைபெற்றது.
அதேபோல் எல்லீஸ் நகரில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. முன்னதாக ஊஞ்சல் வழிபாடும் நடைபெற்றது.
தங்க கவச அலங்காரம்
அதனைத் தொடர்ந்து ஒத்தக்கடை மேலூர் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீயோக சஞ்சீவி ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் திருப்பாலையில் கிருஷ்ணசுவாமி கோவிலில் மங்கள ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், கிருஷ்ணாபுரம் காலனி கோகணேஸ்வரர் சிவன் கோவிலில் வீர அனுமன் சிறப்பு அலங்காரத்திலும், விஸ்வநாதபுரம் பாரதி நகர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்திலும், கூடலழகர் பெருமாள் கோவில் தென் மாடவீதி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சோழவந்தான் அரசு பஸ் பணிமனை எதிரே உள்ள ஜெய வீரஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள ஸ்ரீ மங்களஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக யாகவேள்வி மற்றும் ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம் நடந்தது.ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று மாலை ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், வடைமாலை சாத்தப்பட்டது.