வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் பலி
திருப்பரங்குன்றம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் பலியானார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் பலியானார்.
நகையை பறிக்க முயற்சி
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராமச்சந்திர தடாகதெருவை சேர்ந்தவர் ஜோஸ்பின் ஜான்சிராணி (வயது 52). இவர் சம்பவத்தன்று மதுரைக்கு சென்று விட்டு திருமங்கலத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் நான்கு வழி சாலை மேம்பாலத்தில் சென்றபோது அதே வழியில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம மனிதர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஜோஸ்பின் ஜான்சிராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இந்த நிலையில் நிலைகுலைந்து தடுமாறிய போதிலும் ஜோஸ்பின் ஜான்சிராணி வாகனத்தை ஓட்டியபடி சென்றுள்ளார்.
பலி
இதன்பின்னர் அந்த 2 மர்ம மனிதர்கள் ஜோஸ்பின் ஜான்சிராணியை தாக்கியதாக தெரிகிறது. அதில் அவர் தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். அப்போது அந்த வழியாக மக்கள் நடமாட்டம் அதிகமானதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதற்கிடையே காயமடைந்த ஜோஸ்பின் ஜான்சிராணியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.