தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம்:
வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
வெளிநாட்டில் வேலை
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் விஜய் சுவாமி ராஜ் (வயது 35). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு வெளிநாட்டில் பிட்டராக வேலை செய்து வந்தார்.
பின்னர் ஊருக்கு திரும்பிய விஜய் சுவாமிராஜூக்கும் குமரி மாவட்டம் கனகப்பபுரத்தை சேர்ந்த பொன்லலிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கனகப்பபுரத்தில் மனைவியுடன் விஜய் சுவாமி ராஜ் வசித்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் விஜய் சுவாமிராஜ், மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக மாமியாரிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி தருமாறு மனைவிடம் கூறினார். ஆனால் பணம் கிடைக்காததால், அவர் வெளிநாட்டு வேலைக்கு செல்லமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு நடந்தது. அதன்பிறகு விஜய் சுவாமிராஜ் படுக்கை அறைக்கு தூங்க சென்றார்.
மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவர் அறை கதவு திறக்கவில்லை. இதனால் பதறி போன பொன்லலிதா, அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு விஜய் சுவாமிராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
விசாரணை
இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால், வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.