பேராவூரணியில் அதிக பட்சமாக 22 செ.மீ. மழை பெய்தது
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் நிலக்கடலை சாகுபடி செய்த வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேராவூரணியில் அதிக பட்சமாக 22 செ.மீட்டர் மழை பெய்தது.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் நிலக்கடலை சாகுபடி செய்த வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேராவூரணியில் அதிக பட்சமாக 22 செ.மீட்டர் மழை பெய்தது.
பலத்த மழை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2-வது நாளாக பலத்த மழை கொட்டியது. இரவு வரை இந்த மழை நீடித்தது. நள்ளிரவுக்குப்பின்னர் மழை இன்றி காணப்பட்டது. நேற்று காலை முதல் மழை இன்றி வெயில் கொளுத்தியது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மழை கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, ஈச்சன்விடுதி பகுதியில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்த்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
நெற்பயிர்கள் சாய்ந்தன
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் முன்பட்ட சம்பா சாகுபடி தற்போது அறுவடைக்கு தயராக உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பல இடங்களில் அறுவடைக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தது.
பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியும் காணப்பட்டன. அம்மாப்பேட்டை, அன்னப்பன்பேட்டை, திருவோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்தன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நிலக்கடலை சாகுபடி
இதே போல் திருவோணம் பகுதியில் உள்ள கரியாவிடுதி, தோப்பநாயகம் பகுதியிலும் ஏராளமான ஏக்கரில் நிலக்கடை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் பல இடங்களில் தற்போது நிலக்கடலை முளைக்கும் தருவாயில் இருந்த நிலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் விதைகள் அழுகும் நிலை உள்ளது. பல இடங்களில் கடலை முளைத்த வயல்களிலும்தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
100 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேராவூரணி 223, ஈச்சன்விடுதி 210, பட்டுக்கோட்டை 183, அதிராம்பட்டினம் 159, மதுக்கூர் 108, தஞ்சை 85, அணைக்கரை 78, வெட்டிக்காடு 75, பாபநாசம் 62, அய்யம்பேட்டை 62, மஞ்சளாறு 55, குருங்குளம் 47, திருவையாறு 46, பாபநாசம் 41, பூதலூர் 40, ஒரத்தநாடு 40, திருக்காட்டுப்பள்ளி 40, திருவிடைமருதூர் 39, கும்பகோணம் 35, கல்லணை 25, வல்லம் 20, நெய்வாசல் தென்பாதி 18.