காவேரிப்பாக்கம் அருேக அம்மன் கோவிலில் நவக்கிரக சிலைகள் சூலம் சேதம்
காவேரிப்பாக்கம் அருகே அம்மன் கோவிலில் சூலம், நவக்கிரக சாமி சிலையை மர்மநபர் சேதப்படுத்தி உள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் அருகே அம்மன் கோவிலில் சூலம், நவக்கிரக சாமி சிலையை மர்மநபர் சேதப்படுத்தி உள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துர்க்கையம்மன் கோவில்
காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த துர்கையம்மன் கோவில் உள்ளது. கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் சிறப்பு பூஜைகளும், ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை சாத்தி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை வழியாக சென்ற ஒரு பக்தர் கோவிலின் வெளியே நின்று அம்மனை வழிபட்டார்.
போலீசார் விசாரணை
அப்போது கோவிலின் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சன்னதி, அம்மனுக்கு எதிரே இருந்த திரிசூலம் ஆகியவை சேதம் அடைந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் கிராம மக்களிடம் தெரிவித்தார். கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சேதமடைந்த சிலைகள், சூலத்தை பார்வையிட்டு விசாரித்தனர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட பக்தர்களும், கிராம மக்களும் கோவிலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வலைவீச்சு
யாரேனும் குடிபோதையில் நள்ளிரவில் வந்து நவக்கிரக சிலைகள், சூலத்தை சேதப்படுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி சிலைகளை சேதப்படுத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.