வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 24). இவருக்கும் அதே காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரேம்குமார், லோகேஷ், நவீன், பிரதாப் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 31-ந் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் திருமால்பூர் காலனியில் உள்ள சர்ச் அருகே புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின்போது இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரேம்குமார் உள்ளிட்ட 4 பேரும் பிரவீன்குமாரை தாக்கி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து, நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிவிலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த பிரவீன்குமாரை அவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து பிரேம்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.