பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-02 17:44 GMT
சிதம்பரம், 

கரும்பு அறுவடை

பொங்கல் பண்டிகை விற்பனைக்காக ஆண்டுதோறும் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி, பழையநல்லூர், சாலியன்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அதிகளவில் பன்னீர் கரும்பை பயிரிட்டு, அறுவடை செய்து வருகிறார்கள். அவ்வாறு அறுவடை செய்யப்படும் கரும்புகளை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட கரும்புகள் தற்போது நல்ல முறையில் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தற்போது சிதம்பரம் பகுதியில் கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெளியூர்களுக்கு அனுப்பும் பணி

இதுகுறித்து பழையநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சிதம்பரம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. வீராணம் ஏரியில் இருந்து கிளை வாய்க்கால் மூலம் வந்த தண்ணீரை பாய்ச்சியும், பராமரித்து  வந்ததாலும் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் தற்போது நல்ல முறையில் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. இதனால் மகிழ்ச்சியடைந்த என்னை போன்ற விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் மூலம் கரும்புகளை அறுவடை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதையறிந்த வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் சிதம்பரத்தில் முகாமிட்டு, போட்டி போட்டு கரும்புகளை கொள்முதல் செய்து வாகனங்களில் ஏற்றி விற்பனைக்காக சென்னை, கடலூர், விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். தலா 1 கரும்பு ரூ.12-க்கும் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்