ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-02 17:28 GMT
பொறையாறு:
அனுமன் ஜெயந்தியையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொறையாறு
பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் கடன் தொல்லைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் அமாவாசை அன்று மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயருக்கு இந்த கோவிலில் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபடுவர்.
நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் அமாவாசையையொட்டி திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், பால், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.  பின்னர் வடை, துளசி, வெற்றிலை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மாலைகள், குங்குமம், பழங்கள், தேங்காய் ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வந்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனைகளை மாதவன் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு
கலியுக கடவுளாக கருதப்படும் அனுமன், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று அவதரித்தார். அன்று அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று  அனுமன் ஜெயந்தி என்பதால் செம்பனார்கோவில் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், திரவியங்கள், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் அபய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல் திருநகரி, தற்காசு, நல்லூர், அண்ணன் பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சீர்காழி
சீர்காழியில் பிரசித்தி பெற்ற படித்துறையில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள வீரஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று மூல நட்சத்திரமான அமாவாசையன்று ஆஞ்சநேயர் பிறந்ததினம் என்பதால் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது.
விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து மலர்கள், வெற்றிலை மற்றும் துளசியை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
கொள்ளிடம்
மயிலாடுதுறை அளக்குடி ஊராட்சி காவல் மானியம் கிராமத்தில் உள்ள ஜெயவீரஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருமஞ்சன நிகழ்ச்சியும், மாலை உற்சவர் பிரகார வழிபாடும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 இதேபோல் கொள்ளிடம் அருகே வடரங்கம் பாலஆஞ்சநேயர், மாதிரவேளூர் அச்சம் தீர்த்த பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், மகேந்திரபள்ளி கோதண்டராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குத்தாலம்
 குத்தாலம் அருகே சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நரசிம்மர், கருடன், வராஹர் உள்ளடக்கிய பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, மஞ்சள் பொடி, தேன் உள்ளிட்ட விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல் 100 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயரையும் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

மேலும் செய்திகள்