டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-01-02 16:53 GMT
கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

டெங்கு காய்ச்சல்

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் டெங்கு காய்ச்சலும் சற்று தலை தூக்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்து வருகிறது.

தற்போது டெங்கு காய்ச்சலின் பாதிப்புக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-திருப்பூர் மாவட்டம் வளையன்காடு பகுதியை சேர்ந்தவர் ராமன். கணினி என்ஜினீயர். இவரது மகள் கனிஷ்கா(வயது 6). இவளுக்கு, கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது.

சிறுமி பலி

இதற்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிறுமியை டெங்கு சிறப்பு வார்டில் அனுமதித்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாள்.

சுகாதாரத்துறை எச்சரிக்கை

இதேபோன்று கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(38). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் காலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

எனினும் மாலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்