உச்சுவாடி பாலத்தை தாங்கி நிற்கும் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
வடபாதிமங்கலத்தில் உச்சுவாடி பாலத்தை தாங்கி நிற்கும் முகப்பில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
த்தாநல்லூர்:
வடபாதிமங்கலத்தில் உச்சுவாடி பாலத்தை தாங்கி நிற்கும் முகப்பில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்சுவாடி பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் உச்சுவாடி கிராமத்திற்கும், அரிச்சந்திரபுரம் கடைவீதிக்குமான இணைப்பு பாலம், வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த பாலத்தை வடபாதிமங்கலம், உச்சுவாடி வடக்கு மற்றும் தெற்கு தெரு, நேதாஜி தெரு, ஒற்றை தெரு, இரட்டை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, மன்னஞ்சி, பெரியகொத்தூர், ராமநாதபுரம், சேந்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தடுப்பு தூண்கள் இடிந்தது
தற்போது இந்த உச்சுவாடி பாலத்தின் கரையோரத்தில் உள்ள முகப்பு பகுதியில் பாலத்தை தாங்கி நிற்கும் இரண்டு பக்கமும் இருந்த தடுப்பு தூண்கள் இடிந்து விழுந்தது. இதனால் தற்காலிகமாக மூங்கில் மரங்கள் தடுப்பாக வைக்கப்பட்டுள்ளது. . ஆனால் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் போது மூங்கில் தடுப்புகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, பாலம் ஆற்றில் கவிழ்ந்து விடுமோ? என்ற அச்சம் உள்ளது.
தடுப்புச்சுவர்
இதனால் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் போது பாலத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரும், இரவு நேரங்களில் வருவோரும் உயிர்பலி ஏதும் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே உயிர்பலி ஏற்படும் முன் உச்சுவாடி பாலத்தை தாங்கி நிற்கும் மூங்கில் தடுப்புகளை அகற்றிவிட்டு, பாலத்தை தாங்கி நிற்கும் முகப்பில் இரண்டு பக்கமும் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.