நாகூரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆய்வு

கந்தூரி விழா நாளை தொடங்குவதை முன்னிட்டு நாகூரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-02 16:42 GMT
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நாளை (செவ்வாய்க் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை  நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தர்காவிற்கு வருபவர்கள் அவசியம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தர்கா நிர்வாகியிடம் அறிவுறுத்தினார். அலங்கார வாசலில்  புறகாவல் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை  பாலையிட்டார். அதனை தொடர்ந்து கந்தூரி ஊர்வலம் செல்ல உள்ள வாணக்கார தெரு, தெற்குதெரு, கடைத்தெரு ஆகிய இடங்களில் நடந்து சென்று பார்வையிட்டார்.  அலங்கார வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தர்கா கலிபா மஸ்தான் சாஹிப், தர்கா மேலாளர் ஜெகபர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்