காளை உரிமையாளர்கள் திடீர் சாலைமறியல்
கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க டோக்கன் கிடைக்காததால் காளை உரிமையாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போத்தனூர்
கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க டோக்கன் கிடைக்காததால் காளை உரிமையாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டி
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியில் வருகிற 9-ந் தேதி தி.மு.க. சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஈரோடு, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக செட்டிப்பாளையம் பகுதியில் கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் மற்றும் காளைகள் முன்பதிவு செய்யும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கிடையில் நேற்று திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை உரிமையாளர்கள் பதிவு செய்ய வந்தனர். அப்போது போட்டியாளர்கள் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 10-ந் தேதி வரை தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே டோக்கன் வழங்கப்படவில்லை என்று கூறினர்.
திடீர் சாலை மறியல்
இதனால் நீண்ட தொலைவில் இருந்து வந்த காளை உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து டோக்கன் கிடைக்காத ஆத்திரத்தில் கொச்சி-பாலக்காடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதற்கிடையில், அங்கு வந்த விழா ஒருங்கிணைப்பாளர் தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதமலை சேனாபதியும் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி உள்ளதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
களை உரிமையாளர்கள் சாலை மறியல் காரணமாக கொச்சி-பாலக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.