ஓசூர் அருகே பயங்கரம் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை 6 பேர் கைது

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-02 16:34 GMT
மத்திகிரி:
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-
தனியார் நிறுவன ஊழியர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய மகன் மோகன்பாபு (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவர், ஸ்ரீ ராம் சேனா (தமிழ்நாடு) என்ற அமைப்பின் ஓசூர் நகர செயலாளராகவும் இருந்து வந்தார்.
அதே சொப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் திலக் (20). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகன்பாபுவின் மோட்டார்சைக்கிளும், திலக்கின் தந்தை முருகேசின் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது முதல் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
கத்தியால் குத்தினர் 
 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன்பாபு, அவரது நண்பர்கள் முருகேஷ், சிவப்பா ஆகியோர் மோகன்பாபுவின் வீட்டுக்கு அருகில் உள்ள மாந்தோப்பு பக்கமாக அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அங்கு திலக் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் அங்கு வந்தனர்.
அப்போது அவர்களுக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த திலக் கோஷ்டியினர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மோகன்பாபுவை சரமாரியாக குத்தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பரிதாப சாவு 
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மோகன்பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்த கொலை தொடர்பாக திலக், அவரது நண்பர்களான பவன் (23), மூர்த்தி (20), அப்பு என்கிற ராகேஷ் (20), ஹேமந்த் (21), சுரேஷ் (20) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கூட்டமாக வருதல், கலகம் விளைவித்தல், கொலை செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்