கடல் அரிப்பால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்

நாகை அருகே கல்லார் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே கடற்கரையில் கருங்கற்களை கொட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-02 16:25 GMT
வெளிப்பாளையம்:
நாகை அருகே  கல்லார் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே கடற்கரையில் கருங்கற்களை கொட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடல் அரிப்பு
நாகை கல்லார் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்தி சீர் செய்தல், வலை பின்னுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் வீடுகள் உள்ளது. 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லார் கிராமத்தில் கடல் அரிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இங்கு அலை தடுப்புக்காக கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கருங்கற்களில் இருந்து 50 அடி தூரம் தள்ளி கடல் இருந்தது. ஆனால் தற்போது கொட்டப்பட்டுள்ள கருங்கற்களை தாண்டி கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 150 அடிக்கு கடல் நீர் உள்ளே வந்துள்ளது. 
தண்ணீர் புகும் அபாயம்
இப்படி நாளுக்கு நாள் கடல் அரிப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதே போன்று தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டால் கல்லார் கிராமம் விரைவில் கடல்  நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து கல்லார் கிராம மீனவர்கள் கூறியதாவது:-
நாகை கல்லார் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். கரையோரத்தில் தான் படகுகளை நிறுத்தி வைத்துள்ளோம்.  
 தடுப்புச்சுவர்
கடந்த சில நாட்களாக கல்லார் கடற்கரையில் கடல் அரிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் 150 அடிக்கு கடல் நீர் உள்ளே வந்துள்ளது. இயற்கை சீற்ற காலங்களில் இன்னும் அதிக அளவிற்கு கடல் நீர் உள்ளே வருகிறது. இதே நிலை நீடித்தால் கடல் நீரில் கல்லார் கிராமம் மூழ்கிவிடும். 
எனவே தற்போது கடற்கரையையொட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு கருங்கற்களை கொட்டி தடுப்புச்சுவர் அமைத்து கல்லார் கிராமத்துக்குள கடல் நீர் புகுவதை  தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்