அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-01-02 15:51 GMT
திண்டுக்கல்:
அனுமன் ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மெயின்ரோடு வீரஆஞ்சநேயர் கோவிலில் பூப்பந்தல் அமைக்கப்பட்டு, காலை 5 மணியளவில் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆப்பிள், ஆரஞ்சு உள்பட பல்வேறு பழங்களால் அலங்காரம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூப்பந்தல் அலங்காரம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் கோபாலசமுத்திரம் பால ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேலும் திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு துளசி, வெற்றிலை, வடை மாலை சாற்றி வழிபட்டனர்.
சிறப்பு பூஜை
இதேபோல் பழனி அருகே கரடிக்கூட்டம் பகுதியில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த வடைமாலை சாத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பாலாறு ஆஞ்சநேயர் கோவில் உள்பட பழனி பகுதியில் பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தரிசனம்
வேடசந்தூர் அருகே சீத்தமரம் நால்ரோட்டில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கோவில் மேல் உள்ள 54 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
கொடைக்கானல்
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்