ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை;
ஊட்டி
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட் டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள் நிரம்பின.
வாகனங்கள் வரத்து அதிகரித்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தோட்டக்கலை பூங்காக்களில் பூத்துக் குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
1 லட்சம் பேர் வருகை
மேலும் ஊட்டி படகு இல்ல சாலை, சூட்டிங்மட்டத்தில் குதிரை சவாரி சென்று மகிழ்ச்சி அடைந்தார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டை ஊட்டியில் கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்ததால் சீசன் போல் களை கட்டியது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை கடந்த 24-ந் தேதி 5 ஆயிரத்து 682 பேர், 25-ந் தேதி 15 ஆயிரத்து 067 பேர், 26-ந் தேதி 15 ஆயிரத்து 839 பேர், 27-ந் தேதி 11,041 பேர், 28-ந் தேதி 11 ஆயிரத்து 336 பேர், 29-ந் தேதி 9 ஆயிரத்து 984 பேர், 30-ந் தேதி 9 ஆயிரத்து 369 பேர், 31-ந் தேதி 7 ஆயிரத்து 73 பேர், நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 333 பேர், நேற்று 10,000 பேர் என 10 நாட்களில் மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 724 பேர் கண்டு ரசித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதேபோல் ஊட்டி படகு இல்லத்துக்கு 10 நாளில் 69 ஆயிரத்து 500 பேர் வருகை தந்தனர். அங்கு மினி ரெயில் மற்றும் பிற விளையாட்டு உபகரணங்களில் தங்களது குழந்தைகளுடன் விளையாடி சுற்றுலா பயணிகள் குதூகலமடைந்தனர். வாகனம் நிறுத்துமிடம் சுற்றுலா வாகனங்களால் நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.