கோத்தகிரி அருகே நீரோடையை தூர்வாரும் பணி மும்முரம்

கோத்தகிரி அருகே நீரோடையை தூர்வாரும் பணி மும்முரம்

Update: 2022-01-02 15:28 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே நீரோடையை தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

நீரோடை ஆக்கிமிப்பு

கோத்தகிரி அருகே உள்ள காவிலோரை கிராமப் பகுதியையொட்டி நீரோடை செல்கிறது. இந்த நீரோடையை நம்பி காவிலோரை, குருக்குத்தி, வ.உ.சி. நகர், ஓடேன் துறை உள்ளிட்ட கிராம விவசாயிகள் பல ஏக்கரில் மலைகாய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்த நீரோடை கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் நீரோடை முழுவதும் புதர்கள் ஆக்கிரமித்ததுடன் சுருங்கி காணப்பட்டது. இதனால் ஓடையில் நீரோட்டம் தடை பட்டு வந்ததுடன், தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

விவசாயிகள் கோரிக்கை

இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக, இந்த நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புதர்மண்டி கிடந்ததால் மழைநீர் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் காய்கறி பயிர்கள் சேதம் அடைந்தன. எனவே இந்த ஓடையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால் இந்த நீரோடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் காவிலோரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகளே நீரோடையை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி காவிலோரை கிராமத்தில் தூர்வாரும் பணி நடந்தது. 

தூர்வாரும் பணி 

தொடர்ந்து 2-ம் கட்டமாக காவிலோரையில் இருந்து காக்காசோலை வரை செல்லும் நீரோடையை தூர்வாரும் பணியை விவசாயிகள் மேற் கொண்டனர். இதற்காக அனுமதி பெற்று சிறிய அளவிலான பொக்லைன் எந்திரம் மூலம் நீரோடையில் வளர்ந்து இருந்த புதர்களை வெட்டி அகற்றினார்கள். 

தொடர்ந்து தூர்வாரும் பணி நடந்து வருவதால், புதர்மண்டி கிடந்த நீரோடை தற்போது பளிச்சென்று காணப்படுகிறது. இதனால் மழைநீரை சேமித்து வைத்து கோடைக்காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்த முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்