படகு இல்லம் தாவரவியல் பூங்கா பயன்பாட்டுக்கு வருமா
படகு இல்லம் தாவரவியல் பூங்கா பயன்பாட்டுக்கு வருமா
வால்பாறை
வால்பாறையில் படகு இல்லம், தாவரவியல் பூங்கா எப்போது பயன்பாட்டுக்கு வருமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
சுற்றுலா பருவ காலம்
வால்பாறையில் பொருளாதாரா மேம்பாட்டிற்காக சோலையாறு அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய அணைக்கட்டுகள் மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்கள், இயற்கை அழகுடன் கூடிய வனப்பகுதிகளை வெளிப்படுத்தி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக வால்பாறை மாற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு சுற்றுலா தலமாக மாறிவரும் வால்பாறைக்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தான் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்கு காரணம் ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என்று அதிகளவில் அரசு விடுமுறை கிடைக்கும். மேலும் ஜனவரி மாதத்தில் இருந்து தான் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வரத்தொடங்கிவிடுவார்கள். எனவே தான் வால்பாறையின் சுற்றுலா பருவ காலம் என்று ஜனவரி மாதம் அழைக்கப்படுகிறது.
பயன்பாட்டுக்கு வருமா?
வால்பாறையில் பெரியளவிலான சுற்றுலா தலங்களே இல்லாத நிலையில் வால்பாறை நகர் பகுதியில் வியாபாரங்களை அதிகரிக்கச் செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படகு இல்லம், தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகள், வால்பாறை பகுதி பொது மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
எனவே கோவை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்து சுற்றுலா பருவ காலத்தில் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கு அம்சத்தை கருத்தில் கொண்டும் பூங்கா மற்றும் படகு இல்லத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
வியாபாரிகள் பாதிப்பு
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வால்பாறையில் உள்ள இயற்கை அழகுகளை சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நகராட்சி சார்பில் படகு இல்லம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் நிர்வாக முறைகேடுகள் காரணமாக அவைகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றன. மேலும் வியாபாரிகளும் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. மேலும் அங்கு மின்னொளியில் பூங்கா ஜொலித்தது. இது பார்க்க மிகவும் அழகாக இருந்தது. எனவே பூங்கா மற்றும் படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.