அனுமன் ஜெயந்தி விழா

அனுமன் ஜெயந்தி விழா

Update: 2022-01-02 11:56 GMT
அனுப்பர்பாளையம், ஜன.3-
திருப்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனுமன் ஜெயந்தி
திருப்பூர், பொங்கலூர், சேவூர்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதன்படி திருப்பூர் சபாபதிபுரத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கலச ஸ்தாபனம், ஹோமம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மங்கள இசையுடன் நேற்று தொடங்கிய விழாவில் சீதாராம ஆஞ்சநோய சாமிக்கு சிறப்பு மகா கலச அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேய சாமிக்கு பால், தயிர், இளநீர், பாதாம், பிஸ்தா, தேன், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக பூஜையும், புஷ்ப அலங்கார பூஜையும் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
கொடுவாயில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில்  அனுமன் ஜெயந்தியை ஒட்டி சுவாமிக்கு கனிகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோவில்வழியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் மற்றும் வடைமாலை சாத்தி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. 
சேவூர்
 சேவூர் வடக்கு வீதியில் தெப்பக்குளத்து ஆஞ்சநேயர் கோவிலில்  அனுமன் ஜெயந்தியை ஒட்டி, ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து வெண்ணை சாத்தப்பட்டு, வெண்ணை காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு மகா தீபாரதனைகள் நடைபெற்றது. அப்போது ஆஞ்சநேயருக்கு 900 வடை மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல சேவூர் கோட்டை அனுமந்தராயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்