டிக்கெட் எடுக்கவில்லை என கீழே இறக்கிவிட்டதால் ஆத்திரத்தில் அரசு பஸ் கண்டக்டருக்கு அடி-உதை

டிக்கெட் எடுக்கவில்லை என பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட்டதால் ஆத்திரத்தில் அரசு பஸ் கண்டக்டரை அடித்து உதைத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-01-02 11:06 GMT
டிக்கெட் எடுக்க மறுப்பு

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 50). இவர். ஆவடியில் இருந்து கீழ்க்கொண்டையார் செல்லும் அரசு பஸ்சில் (தடம் எண் 61-இ) கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஆவடியில் இருந்து கீழ்க்கண்டயார் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது கரலப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் 2 வாலிபர்கள் பஸ்சில் ஏறினர். அவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் ஈஸ்வரன் கேட்டார். ஆனால் அந்த வாலிபர்கள், டிக்கெட் எடுக்க மறுத்து ஈஸ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கீழே இறக்கி விட்டார்

இதனால் கண்டக்டர் ஈஸ்வரன், பஸ்சை நிறுத்தி டிக்கெட் எடுக்க மறுத்த 2 பேரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டார். பின்னர் மீண்டும் பஸ் புறப்பட்டு கீழ்க்கொண்டயார் நோக்கி சென்று விட்டது.

பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் மீண்டும் பஸ் அந்த வழியாகத்தான் வரும் என்று அங்கேயே காத்திருந்தனர். அதன்படி கீழ்க்கொண்டையார் சென்ற பஸ் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே வழியாக ஆவடி நோக்கி வந்துகொண்டிருந்தது.

கண்டக்டருக்கு அடி-உதை

அப்போது 2 வாலிபர்களும் அதே கரலப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும் பஸ்சின் உள்ளே ஏறி கண்டக்டர் ஈஸ்வரனின் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து உதைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி கண்டக்டர் ஈஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்