கொரோனா, ஒமைக்ரான் பரவல் எதிரொலி கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்தன

கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்தன

Update: 2022-01-01 22:02 GMT
நெல்லை:
கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்தன. ஓட்டல், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
ஒமைக்ரான் பரவல்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த நிலையில், அந்த வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற பெயரில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியோருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உள்ளதா? என்று அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. 
50 சதவீதம் பேர் 
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
தியேட்டர்களிலும் ஒரு இருக்கை விட்டு, மற்றொரு இருக்கை என்ற இடைவெளி அடிப்படையில் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. குறைவான ரசிகர்களே தியேட்டர்களுக்கு வந்திருந்ததால் அவர்கள் ஆங்காங்கே தனித்தனியாக அமர்ந்து சினிமா பார்த்து ரசித்தனர்.
பயணிகள் முககவசம் 
மேலும் பஸ்களிலும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. 
அதாவது பயணிகள் கூட்டமாக நின்று கொண்டு பயணிக்கக்கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. 
மேலும் பயணிகள் முககவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லையில் நேற்று பெரும்பாலான பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்தபடி பயணம் செய்தனர். முககவசம் அணியாத பயணிகளிடம் கண்டக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசம் அணிய வைத்தனர்.

மேலும் செய்திகள்