பவானி சங்கமேஸ்வரர் கோவில் கடையின் பிரசாத முறுக்கு பாக்கெட்டில் ஹலால் என அச்சடிக்கப்பட்டதால் பரபரப்பு- பா.ஜ.க.- இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பிரசாத கடையில் விற்பனை செய்யப்பட்ட பிரசாத முறுக்கு பாக்கெட்டில் ஹலால் என அச்சடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-01 22:00 GMT
பவானி
பவானி சங்கமேஸ்வரர் கோவில் பிரசாத கடையில் விற்பனை செய்யப்பட்ட பிரசாத முறுக்கு பாக்கெட்டில் ஹலால் என அச்சடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சங்கமேஸ்வரர் கோவில்
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில்  இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வார்கள். 
கோவில் பிரசாதங்கள் விற்பனை செய்வதற்காக அங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னதி அருகே பிரசாத கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கடையை பவானியை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். பிரசாத கடையில் சர்க்கரை பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், லட்டு, அதிரசம், முறுக்கு போன்றவை  கோவில் வளாகத்திலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
பக்தர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் கோவிலில் உள்ள பிரசாத கடையில் விதிகளை மீறி வெளியில் இருந்து முறுக்கு உள்ளிட்ட சில தின்பண்டங்கள் வாங்கி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முறுக்கு பாக்கெட்டில் ஹலால் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதை கண்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி பகுதியை சேர்ந்த பா.ஜ.க. மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கோவிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்திற்கு சென்றனர். 
போராட்டம்
பின்னர் அவர்கள் அங்கிருந்த உதவி ஆணையர் சபர்மதி மற்றும் அதிகாரிகளிடம், ‘ஹலால் என அச்சடிக்கப்பட்ட முறுக்கு பாக்கெட் விற்பனை செய்தது’, தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. மற்றும் இந்து மக்கள் கட்சியினர் பிரசாத கடையின் முன்பு உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் உதவி ஆணையர் சபர்மதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம், ‘பிரசாத கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது,’ எனவும் கூறினார். மேலும் கடையில் இருந்த தின்பண்டங்கள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், கடையும் மூடப்பட்டது.  இதில் சமாதானம் அடைந்த பா.ஜ.க.வினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
நோட்டீஸ்
இதற்கிடையே விதிமுறைகளை மீறி வெளியில் உள்ள தின்பண்டங்களை கோவில் பிரசாத கடைக்கு வாங்கி வந்து விற்பனை செய்ததற்காக கடையின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு குத்தகைதாரருக்கு நோட்டீசும் உதவி ஆணையர் சபர்மதி வழங்கினார். 
இந்த சம்பவத்தால் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்