‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
சேலம் உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கந்தாஸ்ரமம் செல்லும் வழியில் உள்ள வெங்கடேச பெருமாள் கார்டன் பகுதியில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் பலர் அமர்ந்து மது குடிக்கிறார்கள். சிலர் அங்கு புதிதாக கட்டப்பட்டு இருக்கும் வீட்டுக்குள் அமர்ந்து மது அருந்தி அட்டகாசம் செய்கிறார்கள். மேலும் மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறார்கள். அவர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குற்றச்சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க இரவு நேரத்தில் அம்மாபேட்டை போலீசார் ரோந்து செல்வார்களா?
ஊர்பொதுமக்கள், உடையாப்பட்டி, சேலம்.
===
வடிகால் வசதி மேம்படுத்தப்படுமா?
தர்மபுரி நகரில் உள்ள சேலம் சாலையில் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் லேசான மழை பெய்தால் கூட இந்த சாலையில் பல இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்திய பின்னரும் அங்கு மழைநீர் தேங்குவது தொடர்கிறது. இவ்வாறு தொடர்ந்து மழைநீர் தேங்குவதால் சாலைகள் எளிதில் சேதமடைகிறது. இதை தவிர்க்க இந்த சாலையின் இருபுறமும் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் சாலையில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-முருகன், தர்மபுரி.
===
குடிநீர் வருமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாலம்பட்டி கிராமத்தில் 10 நாட்களாக தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள்,
சுண்ணாலம்பட்டி, கிருஷ்ணகிரி.
==
விபத்துகள் தடுக்கப்படுமா?
கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் சாலையில் 5 ரோடு ரவுண்டானா அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. இந்த பகுதியில், விபத்துகளை குறைக்கும் வகையில் சாலையின் நடுவின் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பர்கூர் பஸ்கள் நிற்க கூடிய இடத்தின் அருகில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரை சிலர் இடித்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் வசதி செய்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. தினமும் 2 முதல் 3 மோட்டார் சைக்கிள்கள் அந்த இடத்தில் மோதும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சாலையின் நடுவில் உள்ள இந்த தடுப்பு சுவரை முழுவதுமாக அடைத்து, விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், கிருஷ்ணகிரி.
===
பொது கழிப்பிடம் வேண்டும்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா எம்.செட்டிப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். அங்கு பொதுக்கழிப்பிடம் இல்லாததால் பெண்கள் மிகவும் அவதிப்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை கிராம சபை கூட்டத்தில் மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பிடம் இல்லாமல் அவதிப்படும் ஆதிதிராவிட மக்களுக்கு பொதுகழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?
-க.சாந்தகுமார், எம்.செட்டிப்பட்டி, சேலம்.
===
தார் சாலை சீரமைக்கப்படுமா?
தர்மபுரி- பாலக்கோடு இடையே புலிக்கரை, சோமனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே உள்ள தார்சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. எனவே அதிகளவில் வாகன போக்குவரத்து கொண்ட தர்மபுரி- பாலக்கோடு இடையிலான தார் சாலையில் சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராஜேந்திரன், தர்மபுரி.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் ஆங்காங்கே பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர முன்வருவார்களா?
-ஊர்மக்கள், கிச்சிப்பாளையம், சேலம்.
===
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
சேலம் மணியனூர் சின்னகாளியம்மன் கோவில் பின்புறம் பழைய ரேஷன்கடை சாலையில் 20 அடி சாலையை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜெயபால், மணியனூர், சேலம்.
==
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்திற்குள் ஆடு, மாடு, பன்றி, குதிரை போன்றவை சுற்றித்திரிகின்றன. இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியின் சுற்றுச்சுவரின் உயரத்தை மேலும் உயர்த்தி கட்டினால் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.
-மாதேஸ்வரன், ஆத்தூர்.