கர்நாடகத்தில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி போட முடிவு
கா்நாடகத்தில் 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கா்நாடகத்தில் 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மந்திரி அஸ்வத் நாராயண்தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
எதிர்கொள்ள தயார்
கர்நாடகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு திங்கட்கிழமை முதல் (அதாவது நாளை) கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்க இருக்கிறது. இதற்கு தேவையான அனைத்து பணிகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு 3-வது அலை என்று சொல்ல முடியாது. அதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும் மாநிலத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.
24 மணிநேரமும் தடுப்பூசி
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் விதமாக சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை அரசு தொடங்கி இருக்கிறது. இதற்காக 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கவும் அரசு முடிவு செய்திருக்கிறது. மேகதாது அணைகட்டும் விவகாரம் தொடர்பாக காங்கிரசார் பாதயாத்திரை நடத்த உள்ளனர்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத்துறையில் திறமை மிக்கவர். அவருக்கு ஏற்கனவே நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது. மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் பற்றி சட்டசபையிலேயே அரசு திடமான முடிவை எடுத்து அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தக்க பதிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காக...
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மாநிலத்தில் எந்த ஒரு நீர்ப்பாசன திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்தவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக மேகதாது விவகாரத்தை தற்போது காங்கிரஸ் கையில் எடுத்து பாதயாத்திரை மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளனர். மக்களை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே மேகதாது விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.
நிலம், நீர், மொழி பிரச்சினையில் அரசு எப்போதும் சமாதானமாகவோ, சமரசம் செய்துகொண்டோ இருந்ததில்லை. மேகதாதுவில் அணைகட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக பா.ஜனதா அரசு எடுத்து வருகிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூட வருகிற 3-ந் தேதி ராமநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.