ஆங்கில புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
பெங்களூரு: ஆங்கில புத்தாண்டை யொட்டி கர்நாடகத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல, கர்நாடகத்திலும் ஆங்கில புத்தாண்டையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
மாநில அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து நேற்று கர்நாடகம் முழுவதும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் கோவில்கள், தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இஸ்கான் கோவில்
பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள பிரசித்தி பெற்ற இஸ்கான் கோவிலில் கிருஷ்ணர்-ராதைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல ராஜாஜிநகர் 5-வது பிளாக்கில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், கைலாச வைகுண்ட மகாசேத்திர கோவில், ஸ்ரீராமபுரம் பாசியம் நகரில் உள்ள முருகன் கோவில், அல்சூரில் உள்ள சோமேஸ்வரா கோவில் உள்பட பெங்களூருவில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
இதுதவிர மைசூரு சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், தர்மஸ்தாலா மஞ்சுநாதர் கோவில், கோலார் மாவட்டம் மாலூரில் உள்ள சிக்க திருப்பதி கோவில், கோலார் தங்கவயலில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோவில், மைசூரு மாவட்டம நஞ்சன்கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வர் கோவில், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள மலை மாதேஸ்வரா கோவில்.
மங்களூருவில் குக்கே சுப்பிரமணியா கோவில், பெங்களூரு புறநகரில் உள்ள கட்டி சுப்பிரமணியா கோவில், ஒரநாடு அன்னபூர்னேஸ்வரி கோவில், சிக்கந்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில், சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் உள்ள சாரதம்மன் கோவில், சிவமொக்காவில் உள்ள முருகன் கோவில் உள்பட மாநிலம் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கிறிஸ்தவ தேவாலயங்கள்
இதுபோல பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள மாதா ஆலயம், கே.பி.அக்ரஹாரத்தில் சியோன் ஆலயம், மைசூருவில் உள்ள பிலோமினா தேவாலயம், கோலார் தங்கவயலில் உள்ள பெத்தேல் ஜெபவீடு தேவாலயம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பிரார்த்தனை செய்தனர்.