சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 170 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 170 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 170 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ரவுடிகள்
சேலம் மாவட்டத்தில் குற்றச்செயலை தடுக்கும் வகையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பலாத்காரம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடிகள், கொள்ளையர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதேசமயம், இதற்கு முன்பு 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த நடைமுறையை அரசு தற்போது மாற்றி அமைத்துள்ளது. சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம், கொடூர கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை உடனே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அனுமதி வழங்கப்பட்டது.
170 ரவுடிகள் கைது
சேலம் மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள ரவுடிகளை போலீசார் அவ்வப்போது கண்காணித்து வருகிறார்கள்.
அந்த நபர்கள் மீண்டும், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் பட்சத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சேலம் மாநகரில் 129 பேரும், புறநகரில் 41 பேரும் என மொத்தம் 170 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஆவார்கள். சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, கிச்சிப்பாளையம் பகுதிகளில் தொடர் கொலை சம்பவங்களிலும், வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டு வந்த ரவுடிகள் அதிகளவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம், மாவட்டத்தை பொறுத்தவரையில் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஓமலூர், ஆத்தூர் பகுதிகளில் ரவுடிகள் அதிகளவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.