நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
பள்ளி மாணவ-மாணவிகள் 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் 82 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தி உள்ளது. சிறப்பு முகாம்கள் மூலமும், வீடுகள் தேடியும் சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் 9-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி நாளை (திங்கட்கிழமை) முதல் அந்தந்த பள்ளிக்கூடங்களில் போடப்படுகிறது.
தடுப்பூசி
இதுகுறித்து நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் 9-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிகள் 82 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போட மாணவர்களுக்கும், அவருடைய பெற்றோருக்கும் விருப்பம் உள்ளதா? என்பதை அறிவதற்கு ஒரு விண்ணப்பம் பள்ளிக்கூடங்களில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கி அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் வகுப்பு ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது. எத்தனை மாணவர்களின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்களோ அதற்கேற்ப தடுப்பூசி போடும் பணி நடைபெறும். இதை சுகாதாரத்துறையினர் அறிவிப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த தடுப்பூசி போடும் பணி நடக்கிறது, என்றார்.
...........