தாயார் பாதிக்கப்பட்ட நிலையில் துபாயில் இருந்து குமரிக்கு வந்த வாலிபருக்கும் ஒமைக்ரான்

தாயார் பாதிக்கப்பட்ட நிலையில், துபாயில் இருந்து குமரிக்கு வந்த வாலிபருக்கும் ஒமைக்ரான் இருப்பது உறுதியானது.

Update: 2022-01-01 20:14 GMT
நாகர்கோவில்,
தாயார் பாதிக்கப்பட்ட நிலையில், துபாயில் இருந்து குமரிக்கு வந்த வாலிபருக்கும் ஒமைக்ரான் இருப்பது உறுதியானது.
சளி பரிசோதனை
குமரி மாவட்டத்தில் 10-க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. அதாவது நேற்றுமுன்தினம் 30-ஐ தாண்டியது. இதற்கிடையே ஒமைக்ரான் பாதிப்பும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் ஒமைக்ரான் பரவி வருகிறது. ஏற்கனவே குளச்சல் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியானது. இவா் இங்கிலாந்து நாட்டில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்தவர். இதனைதொடர்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் சளி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கும் ஒமைக்ரான் இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர்கள் அனைவரும் கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வாலிபருக்கு ஒமைக்ரான்
இந்தநிலையில் துபாய் நாட்டில் இருந்து குமரிக்கு வந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சளி பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த தாயாருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் வாலிபரின் தாயாருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியானது.
வாலிபரின் பரிசோதனை முடிவு நேற்றுமுன்தினம் வந்தது. அதில் வாலிபருக்கும் ஒமைக்ரான் இருப்பது உறுதியானது. தற்போது அவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவா்களை சுகாதார பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
3 பேருக்கு கொரோனா
மேலும் ஆப்பிரிக்க  நாடான உகாண்டாவில் இருந்து குமரிக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்கள் நாகர்கோவில் பறக்கை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய சளி  மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்