புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2022-01-01 20:04 GMT
தென்காசி:
சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் நள்ளிரவு தரிசனத்திற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
காலையில் இருந்தே பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வர தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா விதிமுறைகளின்படி கோவில் வாசலில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இலஞ்சி கோவில்
இதேபோல் இலஞ்சி குமாரர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில், ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பனவடலிசத்திரம்
பனவடலிசத்திரம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலநீலிதநல்லூர் சிவஞான வெளியப்ப சாஸ்தா கோவில், மேலசிவகாமியம்பாள்புரம் உமையொருபாக ஈஸ்வரர் கோவில், மருக்காலங்குளம் குளக்கார சுவாமி கோவில், சின்னகோவிலாங்குளம் கொடுங்காலா போத்தி அய்யனார் கோவில் ஆகியவற்றில் பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும்தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி அம்மன், பாலநாகம்மன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்பு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடா்ந்து பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் மேற்கே உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதேபோல் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாதகிரி மலை மீது அமர்ந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 

மேலும் செய்திகள்