தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு

தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2022-01-01 19:56 GMT
பெரம்பலூர்:

சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டான 2022-ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பெரம்பலூரில் உள்ள தூய பனிமயமாதா திருத்தலத்தில் நள்ளிரவில் நற்கருணை ஆராதனையும், சிறப்பு திருப்பலியும் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. திருத்தலம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலம் ஆகியவற்றிலும் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையத்தில் உள்ள பழமையான புனித சூசையப்பர் திருத்தலத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவில்களில்...
பெரம்பலூர் மரகதவள்ளித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில், வடக்கு மாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில், தெப்பக்குளம் அருகே உள்ள அய்யப்பசாமி கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில், வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவில், எஸ்.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தவர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகங்களும், உச்சிகால பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீதுள்ள தண்டாயுதபாணி கோவில், செட்டிகுளத்தில் உள்ள குபேர தலமான ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் செட்டிகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாடாலூர் அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடை மாலை சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பெரம்பலூரில் தீரன்நகர் எதிரே உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கேக் வெட்டி உற்சாகம்
2021-ம் ஆண்டு முடிவடைந்து நேற்று 2022 புத்தாண்டு தொடங்கியது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக பெரம்பலூரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் சிறுவர்-சிறுமிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு கூடினர். நள்ளிரவு 12 மணியானயுடன் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கேக்கை ஊட்டிவிட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் தங்களது வீடுகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு நேரத்தில் ஆர்வத்துடன் வண்ண, வண்ண கோலங்களை போட்டனர். மேலும் பலர் வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தங்களது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுக்கு நள்ளிரவு முதலே பகிர்ந்து கொண்டனர்.
கொண்டாட்டங்கள் இல்லாத புத்தாண்டு
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் புத்தாண்டு தினத்தில் வழக்குகள் பதிவு செய்வதை தவிர்க்கவும், விபத்துகள் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் நோக்கத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் போலீசார் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை சிறப்பு ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் சாலைக்கு வந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்து, அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் சாலைகளில் கொண்டாட்டங்கள் இல்லாத புத்தாண்டாக அமைந்தது.
புத்தாண்டை வரவேற்ற வருண பகவான்
ஆங்கில புத்தாண்டை வருண பகவானும் வரவேற்றார். நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை விட்டு, விட்டும், நேற்று பகல் நேரத்தில் பலத்த மழையும் பெய்தது. மழை பெய்ததால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தால் பொதுமக்களில் பலர் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர்.

மேலும் செய்திகள்