ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் சாய்ந்தன

ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன.

Update: 2022-01-01 19:56 GMT
தா.பழூர்:

சம்பா நெற்பயிர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் தா.பழூர், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம், வேம்புகுடி, தென்கச்சிபெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் 5 ஆயிரத்து 400 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா பருவத்தில் தொடக்கத்தில் இருந்தே விவசாயிகள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். டெல்டா பாசன பகுதியான தா.பழூர் வட்டார பகுதி பொன்னார் பிரதான பாசன வாய்க்கால் மூலம் பல்வேறு கிளை வாய்க்கால்கள் வழியாக சுமார் 4 ஆயிரத்து 900 எக்டேர் பரப்பளவில் பாசனம் பெறுகிறது.
மேட்டூரில் இருந்து சரியான நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும் தேவையான தருணத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கொள்ளிட பாசனப் பகுதிக்கு தண்ணீர் வரத்து நின்று போனது. ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்வதற்கு சரியான நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் விதைக்கும் பணி தாமதமானது. ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் சரியான பருவத்தில் விதை விதைத்தனர். சிலர் வழக்கமான ஆடிப்பட்டத்திற்கு ஒரு மாதம் தாமதமாக விதைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிப்பு
பாசனத்திற்கு சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்காத விவசாயிகள் கடந்த ஆகஸ்டு மாத இறுதியிலும், செப்டம்பர் மாத தொடக்கத்திலும் நேரடி விதைப்பு முறைப்படி விதை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். நவம்பர் மாதத்தில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பயிர் அழுகும் நிலை ஏற்பட்டது. பல இடங்களில் நெல் வயல்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
பின்னர் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். மிகவும் சிரமப்பட்டு பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து உரங்களை வாங்கி விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு பயன்படுத்தினர்.
தண்ணீரில் சாய்ந்த பயிர்கள்
கடந்த சில நாட்களாக பச்சை பசேலென நன்றாக வளர்ந்து செழித்து காணப்பட்ட நெல் வயல்களில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான பருவத்தில் விதைக்கப்பட்ட நெல் வயல்களில் கதிர்கள் பால் பிடித்து விளைந்து நின்றன. கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியதோடு கதிர் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. கதிர் முற்றி பழுப்பதற்கு முன்பே தண்ணீரில் சாய்ந்து விட்டதால் இனி அந்த நெற்பயிரை காப்பாற்ற முடியாது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். தாமதமாக விதைக்கப்பட்ட வயல்களில் இப்போதுதான் பயிர்களில் பூ உருவாகி வருகிறது.
அந்த வயல்களில் நெல் பால் பிடிக்கும் பருவம் என்பதால் தற்போது பெய்யும் மழை காரணமாக அதில் உருவாகும் நெல்மணிகள் பதராக மாறிவிடும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். கடுமையான சிரமங்களுக்கிடையில் நன்கு விளைந்து வந்த நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடப்பது விவசாயிகளுக்கு பெருத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தங்கள் வயல்களில் உள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிலக்கடலை
இதேபோல் கடந்த சில நாட்களாக நிலக்கடலை விதைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஒரு வாரத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட கடலை செடிகள் முளைத்து தற்போது செடி உருவாக தொடங்கிவிட்டது. ஆனால் விதை விதைக்கும் பணிகள் நிறைவடைந்து 5 நாட்களுக்கு குறைவாக உள்ள கடலை வயல்களில் விதைக்கப்பட்ட விதை இன்னும் முளைத்து வரவில்லை. விதைத்த இரண்டு நாட்களில் கடலை விதை முளைத்து விடும் என்பதால் இனி அவை முளைத்து வருவதற்கு வாய்ப்பில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே சுமார் ஆயிரம் எக்ேடர் நிலப்பரப்பில் கடலை மீண்டும் ஒருமுறை விதைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நெல், கடலை தவிர பல்வேறு விவசாய பணிகள் தோட்டக்கலை துறை மூலமாகவும், வேளாண்மை துறை மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக அவற்றில் பூச்சி தாக்குதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். பருவம் கடந்து தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.
மீன்சுருட்டி
இதேபோல் கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக மீன்சுருட்டி பகுதியில் உள்ள காட்டுக்கொள்ளை, முத்துசேர்வாமடம், முக்குளம், வீரபோகம், அய்யப்பநாயகன் பேட்டை, படநிலை, காடுவெட்டி, வெத்தியார்வெட்டு, சத்திரம், இளையபெருமாள் நல்லூர் மற்றும் குடிகாடு, மேலணிக்குழி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கடலை பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடலை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்களிலும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.

மேலும் செய்திகள்