சுரண்டை அருகே துணிகரம் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் திருட்டு புத்தாண்டில் ஆலயத்துக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை

அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் திருட்டு

Update: 2022-01-01 19:51 GMT
சுரண்டை:

ஆசிரியர்
சுரண்டை அருகே சாம்பவர்வடகரை அய்யப்பன் கோவில் அருகில் வசிப்பவர் மாசிலாமணி (வயது 55). இவர் சுரண்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
மாசிலாமணியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் நைசாக அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதேபோன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் வைகுண்டராஜனும் (55) புத்தாண்டை முன்னிட்டு இரவில் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அவரது வீட்டின் பின்பக்க கதவையும் உடைத்து திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கு பீரோவில் இருந்த 2½ பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
பின்னர் அதிகாலையில் வீடு திரும்பிய மாசிலாமணி, வைகுண்டராஜன் ஆகியோர் தங்களது வீடுகளில் நகை, பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகார்களின்பேரில், சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடுத்தடுத்த வீடுகளில் புகுந்து நகை-பணம் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்