புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் பக்தர்கள் குவிந்தனா்.
அரியலூர்:
சிறப்பு பிரார்த்தனை- வழிபாடு
அரியலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அரியலூரில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் குடை பிடித்தபடி பெருமாள், சிவன், விநாயகர், முருகன், மாரியம்மன், ஆதிபராசக்தி கோவில்களுக்கு வந்தனர்.
அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் உள்ள கலியுகவரதராச பெருமாள் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து முடி காணிக்கை செலுத்தி பெருமாளை வழிபட்டனர்.
மீன்சுருட்டி
மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று காலை முதலே தொடர்ந்து பெய்த மழையால் பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.