சேதமடைந்த சாலை
அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் மாத்தூர்-முதலார் இணைப்பு சாலை உள்ளது. இந்த சிமெண்டு சாலை கடந்த மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜூன், மாத்தூர்.
ஆபத்தான மின்கம்பம்
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9- வது வார்டு மேலபிளவக்கல்விளை பகுதியில் உள்ள குளத்தின் கரையில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிராங்கிளின் கனிஷ்குமார், எட்டாமடை.
குளத்தை தூர்வார வேண்டும்
வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட நெடுவிளை பகுதியில் பேயாடும்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது குளத்தில் குப்பைகள், பாசி படர்ந்து மாசடைந்து காணப்படுகிறது. எனவே குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், வில்லுக்குறி.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
வன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயப்பற்று பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் கடந்த வருடம் பெய்த மழையால் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. சாய்ந்த மின்கம்பத்திற்கு கம்புகளை கொண்டு முட்டு கொடுத்துள்ளனர். மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், வன்னியூர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சூரப்பள்ளம் பகுதியில் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரேசன்,
சூரப்பள்ளம்.
கால்வாய் தூர்வாரப்படுமா?
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பெதஸ்தா நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் நிறைந்து, செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணசாமி, பூதப்பாண்டி.