சிறுவளையம் ஏரி மதகு உடைந்தது
பனப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் ஏரியின் மதகு நள்ளிரவில் உடைந்ததால் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து வெளியேறியது.;
நெமிலி
பனப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் ஏரியின் மதகு நள்ளிரவில் உடைந்ததால் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து வெளியேறியது.
ஏரி நிரம்பியது
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழையின் காரணமாக அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதேபோல் பனப்பாக்கம் அருகே பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவளையம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியிருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பெய்த மழையின் காரணமாக சிறுவளையம் ஏரியின் மதகில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உடைப்பு ஏற்பட்டது. அதனால் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து வெளியேற தொடங்கியது.
உடைப்பு
நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி தயாளன் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மதகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
பனப்பாக்கம் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரப்பிரிவு உதவி பொறியாளர் சந்திரன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், களப்பணியாளர்கள் வேணுகோபால், சங்கர் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கினர். அதனால் தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். அங்கு சீரமைப்பு பணிகள் ேமலும் நடந்து வருகிறது.