சித்தன்னவாசலில் புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி இல்லாததால் ஏமாற்றம்

சித்தன்னவாசலில் புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகுசவாரி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2022-01-01 17:57 GMT
அன்னவாசல்:
சுற்றுலா தலம்
அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளம் உள்ளது. புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலத்தில் குடும்ப சகிதங்களும், நண்பர்கள், காதலர்கள், சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.
சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சர்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
செல்பி
சித்தன்னவாசல் பூங்காவில் புதிதாக இதய வடிவில் புதுமண தம்பதிகள், காதலர்கள், நண்பர்கள் இணைந்து படம் எடுத்துக் கொள்வதற்காக செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுமண தம்பதிகள், காதலர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என பலர் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
படகு சவாரி இல்லாததால் ஏமாற்றம்
சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குழாமில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்வது வழக்கம். ஆனால் கொரோனா சமயத்தில் மூடப்பட்ட படகு குழாம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
இதுமட்டுமின்றி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.
இணையவழி நுழைவுச்சீட்டு
சுற்றுலா பயணிகள் சமணர் குடவரை கோவில், ஏழடிப்பட்டம் மலைமீது சுற்றி பார்ப்பதற்கும் முன்பு வரை கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்று அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில மாதங்களாக நுழைவு சீட்டு இணையவழியாக மட்டுமே வழங்கப்படும் என இந்திய தொல்பொருள்துறை சார்பில் அறிவிக்கப்பட்டதால் சில சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். 
சிலர் தங்களது செல்போன் மூலம் இணைய வழியில் பணம் செலுத்தி அனுமதி பெற்று சென்றனர். சில சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க முடியாமல் திரும்பி சென்றனர்.
கோரிக்கை
சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு உண்பதற்கு பாதுகாப்புடன் கூடிய உணவு அறை அமைத்துதர வேண்டும். பண்டிகை காலங்களில் சித்தன்னவாசல் உள்ளே செல்வதற்கு பஸ் வசதிகளை அரசு செய்து தர வேண்டும். சிறுவர் பூங்காக்களில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்கள் உடைந்து கிடக்கின்றது.
அதனை அகற்றிவிட்டு இன்னும் அதிகமான விளையாட்டுப் பொருட்களை உருவாக்க வேண்டும். ஓவியம், சமணர் படுக்கை, ஏழடிப்பட்டம் ஆகியவற்றிற்கு செல்வதற்கு முன்புபோல் பணம் செலுத்தி டிக்கெட் பெறுவதற்கான நடைமுறை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்