எருமப்பட்டி அருகே பயங்கரம்: மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கழுத்தை அறுத்துக்கொலை-கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்ததா? என போலீசார் விசாரணை
எருமப்பட்டி அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
எருமப்பட்டி:
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஒப்பந்த ஊழியர் கொலை
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 37). இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் எருமப்பட்டி அருகே புதுக்கோட்டையில் இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் செந்தில்குமார் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையிலும், உடல் பாதி எரிந்த நிலையிலும் காணப்பட்டது.
போலீசார் விசாரணை
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து, எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் செந்தில்குமாரை கொலை செய்தது யார்?, என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் விவகாரம்?
இதனிடையே செந்தில்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எருமப்பட்டி அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.