லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
வந்தவாசி அருகே லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மேல்நர்மா கிராமத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லிகள், எம்.சாண்ட் ஏற்றிய லாரிகள் வாச்சனூர், ஆலத்தூர், வெங்கோடு வழியாக சென்னைக்கு சென்றது.
இந்த நிலையில் ஆலத்தூர் கிராம மக்கள் தங்கள் கிராமம் வழியாக லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் துறையூர், வீரம்பாக்கம், மானாம்பதி வழியாக லாரிகள் சென்னைக்கு சென்றன.
கடந்த சில நாட்களாக ஆலத்தூர் வழியாக மீண்டும் லாரிகள் சென்றன. இதனால் ஆத்திரம் அடைந்த ஆலத்தூர் கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து அவர்கள், லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.