சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல் விழிப்புணர்வு இயக்கம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல் விழிப்புணர்வு இயக்கம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
தர்மபுரி, ஜன.2-
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல் விழிப்புணர்வு இயக்கத்தை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ளது. இங்கு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில் நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா ஒகேனக்கல் விழிப்புணர்வு இயக்க தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். தர்மபுரி எம்.பி. செந்தில்குமார், பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தின் அடையாளமாக திகழும் ஒகேனக்கல் சுற்றுலா தலம் இயற்கை எழில் மிக்க பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள அருவிகளில் குளிக்கவும், பார்த்து ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழக முதல்- அமைச்சர் சட்டமன்றத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இந்த வளர்ச்சி திட்டம் தீட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஒகேனக்கல்லில் ஆய்வு மேற்கொண்டார்.
குடிநீருக்கு பாதிப்பு
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் அது மக்குவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும் வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக் அல்லாத துணிப்பை மற்றும் இயற்கையான பைகள் 4 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்குள் மக்கும் தன்மைக்கு வந்துவிடுகிறது. குடிநீருக்காக ஒகேனக்கல் காவிரி ஆற்று தண்ணீரை நம்பி தான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளன. இங்கு போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அறிந்து ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளும், இங்கு வசித்து வரும் பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மஞ்சப்பை மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும்.
ஒகேனக்கலில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மஞ்சப்பைகள்
விழாவையொட்டி பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. கடைகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி, உதவி மேலாளர் வேதமூர்த்தி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வராஜ், தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ஜெகதீசன், கூத்தப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் மணி உள்பட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.