ஓசூர் அருகே பரபரப்பு போலி மது ஆலை நடத்திய 3 பேர் அதிரடி கைது

ஓசூர் அருகே பரபரப்பு போலி மது ஆலை நடத்திய 3 பேர் அதிரடி கைது;

Update: 2022-01-01 17:24 GMT
ஓசூர்:
ஓசூர் அருகே குடோனில் போலி மது ஆலை நடத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
போலி மது ஆலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகன டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஓசூர் பேரண்டபள்ளி பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதில் டிரைவர் கணேஷ் மற்றும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த கோபால் (50), சிவகாசியை சேர்ந்த போத்திராஜ் ஆகியோர் ஓசூர் அருகே கதிரேப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் போலி மது ஆலை நடத்தி வருவது தெரியவந்தது.
3 பேர் கைது
அதாவது, கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு இவர்கள் மதுபானங்களை வாங்குவார்கள். அதேபோல கதிரேப்பள்ளியில் உள்ள குடோனில் தமிழக டாஸ்மாக் காலி மதுபாட்டில்களை சேகரித்து கொள்வார்கள். பின்னர் அதில் கர்நாடக மதுபானங்களை ஊற்றி தமிழக டாஸ்மாக் மதுபானங்கள் போல ஸ்டிக்கர் ஒட்டி அதனை மூடி டாஸ்மாக் மதுபானங்கள் எனக் கூறி ஓசூர் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இப்படி பல லட்ச ரூபாய்க்கு இவர்கள் மதுபானங்களை விற்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் போலி மது ஆலை குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு போலியாக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த 700 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கணேஷ் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை
பறிமுதல் செய்தனர். 
மேலும் அந்த குடோனில் போலி மதுபாட்டில்கள் செய்வதற்காக பயன்படுத்திய ஸ்டிக்கர்கள், மதுபாட்டில் மூடிகள், மூடியை லாக் செய்யும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர் பகுதியில் போலி மது ஆலை கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்