ஓசூர்:
தர்மபுரி நெல்லி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 62). ஓசூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் சின்னாறு பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பாலத்தில் அவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணா (47). விவசாயி. இவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிளில் ஹர்சத் (4) என்ற சிறுவனும் சென்றான். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் நல்லூர இனப்பசத்திரம் கார்த்திக் (24), ஜெகதீஷ் (20) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் மோதி கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அஸ்வத் நாராயணா இறந்தார். சிறுவன் ஹர்சத், கார்த்திக், ஜெகதீஷ் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளகிரி அருகே உள்ள பி.ஆருப்பள்ளியை சேர்ந்தவர் மேலகப்பா (62). விவசாயி. சம்பவத்தன்று இவர் பெத்த சிகரலப்பள்ளி- கடத்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் மேலகப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.