ஏ.டி.எம். எந்திரத்தில் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் மீட்பு மேற்குவங்கத்தை சேர்ந்தவருக்கு பாராட்டு

ஏடிஎம்எந்திரத்தில் விட்டுச்சென்ற ரூ10 ஆயிரத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-01-01 17:15 GMT
வேலூர்

ஏ.டி.எம்.எந்திரத்தில் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே லாங்கு பஜாரில் உள்ள ஒரு தனியார் வங்கியையொட்டியவாறு ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் நேற்று காலை மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முதர்ஜனா என்பவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணம் வெளியே வந்த படி இருந்தது.
இதைப்பார்த்த முதர்ஜனா பணத்தை எடுத்தார். உடனடியாக அருகில் உள்ள வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பணத்தை ஒப்படைத்தார்.

முதர்ஜனா பணம் எடுக்க செல்லும் முன்பு அந்த மையத்துக்கு பணம் எடுக்க சென்ற யாரோ பணம் எடுக்க முயன்றுள்ளனர். சர்வர் பிரச்சினை அல்லது எந்திர கோளாறு காரணமாக பணம் தாமதமாக வந்திருக்கலாம். பணம் வருவது பற்றி அறியாமல் அந்த நபர் பணத்தை விட்டுச் சென்றிருக்கலாம், எனப் போலீசார் தெரிவித்தனர்.

பணத்தை போலீசில் ஒப்படைத்த மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை போலீசார் பாராட்டினர். பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கி மூலம் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும், என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்