வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு-பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு- பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
ஆங்கில புத்தாண்டையொட்டி வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு- பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை அணிந்து விரதம் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருமுடி கட்டி கொண்டு பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக அகஸ்தியம்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செய்தனர்.
இதேபோல, மேல மறைக்காடார் கோவில், அகஸ்தியம்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோவில், நாட்டு மடம் மாரியம்மன் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், வன துர்க்கை அம்மன் கோவில், ஆறுகாட்டுத்துறை முருகன் மற்றும் ஆறுகாட்டிஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி சாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சத்ரு சம்கார மூர்த்திக்கு, 5, 10, 20, 50, 100, 200, 500, 2 ஆயிரம் ஆகிய ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரியில் சமயபுரத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனம், தேன், இளநீர், பால், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை
இதேபோல நாகை புனித லூர்து அன்னை பேராலயத்தில் மறைவட்ட அதிபர் வின்சன்ட் தேவராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. உதவிப் பங்குத் தந்தை பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் கூட்டு திருப்பலியை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நன்றி வழிபாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியும், மன்றாட்டு நற்கருணை வழிபாடும், நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தலைஞாயிறு
நாகை அருகே பாலையூர் செபஸ்தியார் ஆலயம், மேல கரையிருப்பு செபஸ்தியார் ஆலயம், புலியூர் இருதய ஆண்டவர் ஆலயம், தண்ணிலபாடி ஆரோக்கியமாதா ஆலயம், கலசம்பாடி சவேரியார் ஆலயம் மற்றும் நாகூர் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது.
தலைஞாயிறு கிறிஸ்தவ பேராலயத்தில் மதபோதகர் சந்திரமோகன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. லதா வரவேற்றார். இதில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கேக் வெட்டினார். பின்பு வாணவேடிக்கை களுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதேபோல வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து மாதா ஆலயத்தில்அருட்தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.