கோவில்களில் சிறப்பு பூஜை
கோவையில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவை
கோவையில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனத்துக்கு அனுமதி
ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இதற்கிடையில் இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அங்கு பக்தர்கள் சமூக இடைவெளி உள்பட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில், சாய்பாபா கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
சிறப்பு அபிஷேகம்
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு விநாயகரை வழிபட்டு சென்றனர். பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு 20 ரூபாய் நோட்டுகளை கொண்டு செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.
மருதமலை
இதேபோன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜைக்கு பிறகு கடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தங்க கவசத்தில் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சி அளித்தார். இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நீண்ட வரிசை
சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று காலை முதல் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை வழிபட்டனர்.
மேலும் பிற முக்கிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கோவையில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.