விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழுப்புரம்,
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளி கவசத்தினால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணி ஆனதும் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன், காமராஜர் வீதியில் உள்ள அமராபதி விநாயகர், ரங்கநாதன் சாலையில் உள்ள சக்தி விநாயகர், பெருமாள் கோவில் தெருவில் உள்ள கோட்டை விநாயகர்,
ரெயிலடி விநாயகர், வண்டிமேடு ராகவேந்திரர், திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர், நாப்பாளைய தெருவில் உள்ள சண்டபிரசண்ட மாரியம்மன், புத்துமாரியம்மன், பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சக்தி விநாயகர், ஆதிவாலீஸ்வரர் மற்றும் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவ பெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகமும், வெள்ளி கவச அலங்காரமும் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு உட்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மயிலம்
மயிலம் முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலைய சுவாமிகள் செய்திருந்தனர்.
செஞ்சி
செஞ்சி கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதில் காலையில் தொடங்கி மாலை வரையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.