2-வது நாளாக கொட்டித்தீர்த்த கன மழை

நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக கன மழை கொட்டித்தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2022-01-01 16:23 GMT
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக கன மழை கொட்டித்தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
2-வது நாளாக மழை
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைபெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து இருந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலையில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளான பாப்பா கோவில், சிவசக்தி நகர், பாலையூர், நாகூர் எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.
பொதுமக்கள் அவதி
குறிப்பாக நாகை புதிய பஸ் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அதேபோல பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி சாலை, நீலா மேலவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்த ஓடியது. இதில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. 
காலையில் இருந்து மழை பெய்ததால் ஆங்கில புத்தாண்டையொட்டி வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபட முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனா.
‌ நாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.  தெத்தி, மேல நாகூர், வடகுடி, பாலக்காடு ஆகிய பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் கதிர் விடும் நிலையில் மழை பெய்துள்ளது பயிர்களுக்கு ஏற்றது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 
கீழ்வேளூர்
கீழ்வேளூர், தேவூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி குருக்கத்தி, கூத்தூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் மற்றும் சிக்கல், ஆழியூர், அகரகடம்பனூர், சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட  பகுதிகளில் நேற்று 2-வது நாளாக கன மழை பெய்தது. இந்த மழையால் கீழ்வேளூர் ஒன்றியம் 105 மாணலூர், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி. அய்யடிமங்கலம், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து 2-வது நாளாக  மழை பெய்ததால்  ஆங்கில புத்தாண்டையொட்டி வெளியில் செல்லாமல்ள பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி, ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கரியாப்பட்டினம், செம்போடை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்தது. அவ்வப்போது கன மழையாகவும் பெய்தது. அகஸ்தியன்பள்ளியில் உப்பளத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணியான தரிசி வேலை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பெய்த மழையால் உப்பளங்களில் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.  மேலும் தொடர் மழையால்  உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
வாய்மேடு
     வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம், மருதூர், தலைஞாயிறு, உம்பளச்சேரி, துளசாபுரம், மணக்குடி, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இந்த மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 15 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. கூட்டுறவு வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள நிலையில் மீண்டும் தலைஞாயிறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள என விவசாயிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்