தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.;

Update: 2022-01-01 15:44 GMT
நாய்கள் தொல்லை
காரைக்கால் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தபகுதியில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகிறது. இவை வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்துவிடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்களை விரட்டி செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன்  நடந்து சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருசக்கர மற்றும் கார்களை நாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
---
சுல்தான்கவுஸ், காரைக்கால்
துணை சுகாதார நிலையம் வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் இளையாளூர் ஊராட்சி வடகரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  வடகரை கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
---
பொதுமக்கள், வடகரை.
மரக்கிளைகள் அகற்றப்பட்டது
திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் அன்னியூர் சாலையில் வாய்க்கால் கரை தெருவில் திருமியச்சூர் பிரதானசாலையில் உள்ள மரத்தில் மின்கம்பிகள் உரசி சென்றன. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து மின்கம்பிகள் மீது உரசி சென்ற மரக்கிளைகளை அகற்றினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர் 
ஆபத்தான பயணிகள் நிழற்குடை 
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அண்ணாப்பேட்டை பகுதியில் மாடிக்கடை பஸ்நிறுத்தம் உள்ளது. நிழற்குடை வசதியோடு உள்ள இந்த பஸ்நிறுத்தத்தை தினமும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த நிழற்குடை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் நிழற்குடை உள்ளே தண்ணீர் நுழைவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அபாய நிலையில் உள்ள நிழற்குடையால் விபத்துகள் ஏதும் ஏற்படுமோ? என்று பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
---
பொதுமக்கள், அண்ணாப்பேட்டை.

மேலும் செய்திகள்