தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேங்காய் பருப்பு வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2022-01-01 15:23 GMT
முத்தூர்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேங்காய் பருப்பு வரத்து அதிகரித்து உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.
இதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 3 ஆயிரத்து 448 தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.27.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.24.05-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. மேலும் 105 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.92.35-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.55.75-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
டெண்டர் முறையில் ஏலம்
மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 5 ஆயிரத்து 703 தேங்காய்கள் குறைவாகவும், 54 தேங்காய் பருப்பு மூட்டைகள் கூடுதலாகவும் குறைவாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.2-ம், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.10-ம் குறைவாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது.
மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மூட்டைகள் 5 டன் அளவில் மொத்தம் ரூ‌.3 லட்சத்து 38 ஆயிரத்து 405-க்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஸ்ரீ ரங்கன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்