திருப்பூர் மாவட்டத்தில் ரூ8 கோடி மது விற்பனை
திருப்பூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி ரூ.8 கோடி மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.2 கோடி மது விற்பனை குறைந்துள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி ரூ.8 கோடி மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.2 கோடி மது விற்பனை குறைந்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்
தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாவட்டம் மட்டுமல்லாமல் வெளிமாநில தொழிலாளர்களும் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். உழைப்புக்கு பெயர் பெற்ற திருப்பூரில் டாஸ்மாக் மது விற்பனையும் அதிகமாகவே இருக்கும். அதிலும் சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் மது விற்பனை கூடுதலாகும்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு கொண்டாட்ட காலங்களில் மதுப்பிரியர்களின் உற்சாக மிகுதியால் மது விற்பனை களை கட்டும். திருப்பூர் மாவட்டத்தில் 258 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு சராசரியாக ரூ.6½ கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டையொட்டி மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் மதுப்பிரியர்களின் உற்சாக பயணம் தடைபட்டது.
ரூ.8 கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டையொட்டி நேற்று முன் தினம் ஒரு நாளில் ரூ.8 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமான நாட்களை விட ரூ.1½ கோடி அதிகமாக விற்பனை நடந்துள்ளது. ஆனால் இது கடந்த புத்தாண்டு மது விற்பனையை ஒப்பிடும்போது குறைவு தான். அதாவது கடந்த 2021-ம் ஆண்டு புத்தாண்டு மது விற்பனை என்பது சுமார் ரூ.10 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.8 கோடியாக குறைந்து விட்டது.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாகவும், விபத்து மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியை நள்ளிரவு முழுவதும் முடுக்கி விட்டனர். கட்டுப்பாடுகள் கடுமையாக அமலாக்கப்பட்டதால் மதுப்பிரியர்களின் கொண்டாட்டம் முடங்கியதன் காரணமாக மது விற்பனையும் வீழ்ச்சியடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.