தமிழக-கேரள எல்லைகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமனம்
தமிழக-கேரள எல்லைகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி:
ஒமைக்ரான் வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையடுத்து தமிழக-கேரள மாநில எல்லைகளில் வாகன தணிக்கை நடந்து வருகிறது. இதற்காக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலையான குமுளி மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதை, போடிமெட்டு மலைப்பாதை ஆகிய இடங்களில் போலீஸ் சோதனை சாவடியும், சுகாதாரத்துறை சோதனை சாவடியும் அமைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்குள் வருவதற்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்திய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அதன்பிறகே மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் சுகாதாரத்துறை செவிலியர்கள் சோதனை சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே சோதனை சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கை செய்யும் போது சிலர் வாகனங்களை நிறுத்தாமல் செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால், இங்கு பாதுகாப்பு பணியை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி சோதனை சாவடிகளுக்கு தலா 4 போலீசார் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டதால் அவர்கள் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தணிக்கை செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தாமல் சென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.